Powered By Blogger

Monday 13 June 2016

சொட்டு நீர், தெளிப்பு நீர்ப்பாசன நுட்பங்கள்




இன்றைய நிலையில் வேளாண்மையில் உள்ள பெரிய சிக்கல் நீர்ப்பற்றாக்குறைதான். அண்டை மாநிலங்களிலிருந்து ஆறுகளில் தண்ணீர் கிடைக்காமை, உரிய பருவத்தில் சரியாக மழை பெய்யாததால் வறட்சி ஆகியவற்றால் பாசன வேளாண்மையில் பெரும் அழிவு ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். இதற்குத் தீர்வு நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நவீன முறைகளான சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகியன. இதனை அருட்செல்வர் நீண்ட காலமாக வலியுறுத்தி விவசாயிகளிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

இந்தச் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகியன பற்றிய சில பொதுவான தகவல்களை விவசாயிகளுக்குத் தெரியப்படுத்தினால் அது அவர்கள் இப்பாசன முறைக்கு மாறித் தங்கள் விவசாயத்தைச் செம்மையாகச் செய்ய உதவும். எனவே, அத்தகவல்களுக்காக, திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தமிழ்நாடு சொட்டு நீர்- தெளிப்பு நீர் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ராஜாமணி அவர்களை ஓம் சக்தி சார்பில் அணுகினோம். வாசகர்களுக்காக அவர் அளித்த பேட்டி:
கேள்வி : சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்க ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும்?

பதில் : பயிரைப் பொறுத்துச் செலவாகும். காய்கறிப் பயிர்களுக்குச் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ஒரு ஏக்கருக்குக் குறைந்தது ரூ. 50 ஆயிரம் செலவாகும். சில நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் தருகின்றன. அவை நீடித்து உழைப்பதில்லை. நல்ல தரமான சொட்டு நீர்க் குழாய்களுக்கே மேற்சொன்ன விலை. ஆனால், இதுவே தெளிப்பு நீர்ப்பாசனத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரமே செலவாகும்.
கேள்வி : சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் இரண்டும் எந்தெந்தப் பயிர்களுக்குத் தேவைப்படுகின்றன?

பதில் : மரப்பயிர்களுக்குச் சொட்டு நீரும், பிற பயிர்களுக்குத் தெளிப்பு நீரும் என்பது பொதுவான பழைய முறை. முன்னர் மரப்பயிர்களுக்கு மட்டுமே சொட்டு நீர்ப்பாசனம் செய்தார்கள். ஏனெனில், முன்னர் சொட்டு நீர்க் குழாய்கள் தேவையான இடங்களில் நாமே துளையிடும் வகையில் இருந்தன. இப்போது குழாயினுள்ளேயே குறிப்பிட்ட இடைவெளியில் துளையிடப்பட்டு அவை விற்பனைக்கு வருகின்ற புதிய முறை வந்தபின் கரும்பு, வாழை, கடலை, மஞ்சள், காய்கறி என எல்லாப் பயிர்களுக்கும் சொட்டு நீர்ப்பாசன முறை வந்து விட்டது. இதற்கு அடுத்ததாக வந்துள்ள தெளிப்பு நீர்ப்பாசனமும் எல்லாப் பயிர்களுக்கும் பயன்படுகிறது. மண் வகைகளில் பல வேறுபாடுகள் உள்ளன. சில இடங்களில் உள்ள மண்ணில் நீர் நன்றாக அகலமாகப் பரவும். சில இடங்களில் நீர் மண்ணில் பரவாமல் கம்பி போல் நேராகக் கீழே இறங்கும். இம்மாதிரி இடங்களுக்குத் தெளிப்பு நீர்ப்பாசனம்தான் சிறந்தது.
கேள்வி : சொட்டு நீர், தெளிப்பு நீர் இரண்டில் எதில் தண்ணீர் அதிகம் செலவாகும்?

பதில் : சொட்டு நீரில் தண்ணீர் சற்றுக் குறைவாகச் செலவாகும். ஆனால், தெளிப்பு நீர்ப் பாசனத்தில் அதிக வெயிலுள்ள காலத்தில் சொட்டு நீரில் செய்யாத பாசனத்தைச் செய்ய முடியும். இதில் விளைச்சல் அதிகம் கிடைக்கும்.
கீரை முதலான பயிர்களுக்குப் பயிர்களின் மேலே தண்ணீர் தெளித்தால் அது அதிக அளவில் வளரும். கீரை, மல்பரி, காய்கறிச் செடிகள், கொத்துமல்லி, நிலக்கடலை முதலான பயிர்களுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனம் நல்ல பலனைக் கொடுக்கும். தாராபுரம் அருகில் மணக்கடவு என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு விவசாயி கொத்துமல்லி பயிரிட்டு 45 நாட்களில் அறுவடை செய்து வந்தார். இப்போது தெளிப்பு நீர்ப்பாசனம் ஏற்படுத்திய பின் 30 முதல் 32 நாட்களில் அறுவடை செய்து விடுகிறார். எனவே, தெளிப்புநீர்ப் பாசனத்தால் விளைச்சல் அதிகம் என்பதோடு, சாகுபடி நாட்களும் குறைகிறதென்பது குறிப்பிடத் தக்கது.
சொட்டு நீர்ப்பாசனமும் 2 அடி இடைவெளியில் அமைக்கலாம். ஆனால், தட்ப வெப்பத்தைச் சீராக்குவது தெளிப்பு நீர்ப் பாசனத்தில்தான். சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திருந்தாலும் சில விவசாயிகள் விசைத்தெளிப்பான் மூலம் தக்காளி, பாகற்காய் முதலிய பயிர்களுக்குத் தண்ணீர் தெளிப்பது நடைமுறையில் உள்ளது.
கேள்வி : தெளிப்பு நீர்ப்பாசனத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

பதில் : தெளிப்பு நீர்ப்பாசனத்திற்குப் பழைய முறையில் அலுமினியக் குழாய் பயன்படுத்தப் பட்டது. இதில் தெளிப்பு நீர்க் குழாய் முனைகளை ஒரு வரிசைக் குழாயில் நீர் பாய்ச்சிய பின் அதனைக் கழற்றி அடுத்த வரிசைக் குழாயில் பொருத்திப் பயன்படுத்துமாறு இருந்தது. இது விவசாயிக்கு ஏற்புடையதாக இல்லை.
எனவே, கழற்றி மாட்டும் முறையை மாற்றி நிரந்தரமாக எல்லா வரிசைகளிலும் இந்த முனைகளைப் பொருத்தும் முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், அரசு இதற்குக் கூடுதல் மானியம் தருவதில்லை. பழைய முறைக்கே தந்து வருகிறது.
புதிய முறையில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கேற்பத் தகுந்த முறையிலான தெளிப்பு நீர்க் கருவிகளைப் பொருத்துகிறோம். ரெயின்கன், ரெகுலர் ஸ்பிரிங்லர், மிடில் ஸ்பிரிங்லர், பட்டர்பிளை ஸ்பிரிங்லர், மைக்ரோ ஸ்பிரிங்லர் ஆகிய வகைகள் தெளிப்பு நீர்ப் பாசனத்தில் உள்ளன.
இவற்றில் எதைப் பொருத்துவது என்பது பயிர், பாசனப் பரப்பு, மோட்டார் திறன், கிணற்றின் ஆழம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தகுந்த பாசனத்தைத் தகுந்த இடைவெளியில் அமைப்பதே தெளிப்பு நீர்ப்பாசனத்தின் வெற்றிக்கு வழிசெய்யும்.
ரெயின் கன் என்பதில் நிரந்தரமாகப் பொருத்துவது, கழற்றிப் பொருத்தக் கூடியது என்ற இரு வகைகள் உள்ளன. முற்றிலும் பி.வி.சி. குழாய்களைக் கொண்டு பூமியில் 2 அடி ஆழத்தில் பதித்து நான்கு திசைகளிலும ஒன்றுக்கொன்று 60-70 அடி இடைவெளிகளில் சிமெண்ட் பைப் கொண்டு பில்லர் தூண் போன்ற அமைப்பை ஏற்படுத்துவதே ரெயின்கன் நிரந்தர முறையாகும்.
பி.வி.சி. குழாய்களைப் பூமியில் பதிக்காமல் அதற்குப் பதிலாக ஹெச்.டி.பி.. என்னும் கருப்புக் குழாய்களை 20 அடி நீளத்தில் எளிதில் கழற்றி மாட்டக்கூடிய அமைப்புடன் கூடியதைப் பயன்படுத்தி, இதன் இடையில் மற்றும் முனையில் ரெயின்கன் ஸ்டேண்டுடன் பொருத்திக் கழற்றி மாற்றி அடுத்தடுத்து எடுத்து வைத்துப் பாசனம் செய்வதே கழற்றி மாட்டும் முறை (Detachable System) ஆகும்.
இவை இரண்டும் அனைத்து வகையான தீவனப் பயிர்கள், நிலக்கடலை, மேய்ச்சல் நிலம், தென்னந்தோப்புகள் ஆகியவற்றில் பயன்படும்.
ரெகுலர் ஸ்பிரிங்லர் என்பது முக்கால் அங்குலப் பிளாஸ்டிக் ஸ்பிரிங்லர்களை முற்றிலும் பி.வி.சி. குழாய்களைக் கொண்டு 2 அடி ஆழத்தில் புதைத்து, நான்கு திசைகளிலும் 33 அடி இடைவெளியில் பொருத்தி, சுமார் 20 ஸ்பிரிங்லர் இயங்குவதற்கு வால்வுகளைப் பொருத்துவது ரெகுலர் ஸ்பிரிங்லர் நிரந்தர முறையாகும்.
பி.வி.சி. குழாய்களை நிலத்தில் பதிக்காமல் அதற்குப் பதிலாக 20 அடி நீளத்தில் எளிதில் கழற்றி மாட்டக்கூடிய அமைப்புடன் உள்ள ஹெச்.டி.பி.. என்னும் கருப்புக் குழாய்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு பகுதியாகக் கழற்றி மாட்டிப் பாசனம் செய்வதே கழற்றி மாட்டும் முறையாகும். இதுவும் மேற்சொன்ன பயிர்களுக்கானது.
மிடில் ஸ்பிரிங்லர் என்பது பி.வி.சி. பைப்பில் மெயின் மற்றும் சப் குழாய்களை நிலத்தில் புதைத்துக் கிளைக்குழாய்களுக்கு பி.வி.சி அல்லது சொட்டு நீர்ப்பாசனத்திற்குப் பயன்படும் குழாய்களை நிலத்தின் மேற்பரப்பிலேயே பொருத்தி நான்கு திசைகளிலும் 25 அடி இடைவெளியில் அமைக்கப்படுவதாகும். ஒரு பயிர் அறுவடை முடிந்ததும், கிளைக் குழாய்களை மட்டும் கழற்றி வைத்துவிட்டு அடுத்தப் பயிர் செய்யும் போது மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். அனைத்துத் தீவனப் பயிர்கள், வெங்காயம், மஞ்சள், அனைத்து மலர்ப் பயிர்கள், அனைத்து மூலிகைப் பயிர்கள், நிலக்கடலை, மல்பரிச் செடி ஆகியவற்றிற்கு இம்முறை பயன்படும்.
பட்டர்பிளை ஸ்பிரிங்லர் என்பது மிடில் ஸ்பிரிங்லர் அமைப்புப் போன்றே மெயின், சப் லைன்களுக்குப் பி.வி.சி. குழாய்களை மண்ணில் புதைத்துக் கிளைக் குழாய்களை, பி.வி.சி. அல்லது சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களைப் பயன்படுத்தி நான்கு திசைகளிலும் 20 அடி இடைவெளியில் பொருத்துவதே பட்டர்பிளை ஸ்பிரிங்லர் ஆகும். மிடில் ஸ்பிரிங்லருக்கு ஏற்ற பயிர்கள் அனைத்திற்கும் இம்முறையும் ஏற்புடையது.
மிடில் ஸ்பிரிங்லர், பட்டர்பிளை ஸ்பிரிங்லர்களைப் போன்றே அனைத்து அமைப்பும் 13 அடி இடைவெளியில் அமைப்பது மைக்ரோ ஸ்பிரிங்லர் ஆகும்.
பாக்கர் என்பது நாற்றுப் பண்ணைகள், கோழிப்பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள், பன்றிப் பண்ணைகள், பசுமைக்குடில் ஆகியவற்றில் வெப்பத்தைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
கேள்வி : மாடு, கோழிப் பண்ணைகளில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?

பதில் : மாடு, கோழிப் பண்ணைகளில் தட்ப வெப்ப நிலையை ஒரே சீராகப் பராமரிக்கப் பயன்படுத்தப் படுகிறது. இவற்றில் கூரைக்கு மேலேயும், கட்டடத்தின் உள்ளேயும் பயன்படுத்துவார்கள். கட்டடத்தின் உள்ளே இலேசான தூவலாகச் சிறிது நேரம் மட்டும் தண்ணீர் தெளிக்கப்படும். பின்னர் நிறுத்தி விடுவார்கள். வெப்பம் அதிகமானால் மீண்டும் நீரைத் தெளிப்பார்கள். கட்டடத்தின் உள்பக்கத்தில் குழாய் வழியாகத் தெளித்தால் 5 நிமிடங்களில் 5 டிகிரி வெப்பம் குறையும்.
கேள்வி : சொட்டு நீர்ப் பாசனத்திற்கு அரசு எவ்வளவு மானியம் தருகிறது?

பதில் : அரசு ஒரு ஏக்கருக்கு ரூ. 43 ஆயிரத்து 500-தான் தருகிறது. இரண்டரை ஏக்கர் வைத்துள்ள சிறு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் இத்தொகை. மீதி ஒன்றரை ஏக்கருக்கு இதில் 75 சதவிகித மானியம் தரப்படுகிறது. இந்த மானியத்தை மாநில அரசு 10 சதவிகிதமும், மைய அரசு 90 சதவிகிதமும் தருகின்றன. நிலப்பரப்பு அதிகரிப்பதற்கேற்ப மானிய அளவு குறையும்.
கேள்வி : சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களின் பொதுவான ஆயுட்காலம் எவ்வளவு?

பதில் : தரமான குழாய்களுக்கு நாங்கள் தருவது 3 ஆண்டுகள் உத்தரவாதம். இவை 30 ஆண்டுகளுக்கு உழைக்கக் கூடியவை.
கேள்வி : தென்னை, பாக்கு, வாழை முதலியன நிழல் உள்ளவை. வெங்காயம், நிலக்கடலை முதலியன அப்படி நிழல் தராமல், நிலத்தில் வெயில் அதிகம் படக் கூடியவை. இந்த இருவகைப் பயிர்களுக்கும் பயன்படுத்தும் சொட்டுநீர்க் குழாய்களின் ஆயுள்காலம் வேறுபடுமா?

பதில் : வெங்காயம், நிலக்கடலை, கரும்பு, மஞ்சள் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு மாதத்திலேயே பயிர்கள் வளர்ந்து விடும். எனவே, குழாய்கள் வெயிலில் காயும் என்று சொல்வதற்கில்லை. அதே வேளை வெயிலில் காய்வதனாலேயே குழாயின் ஆயுட்காலம் குறைந்து விடாது.
கேள்வி : சொட்டு நீர்க் குழாய்களை நன்கு பராமரிப்பது எப்படி?
பதில் : குழாய்களிலுள்ள துளைகள் அடிக்கடி அடைக்கும் வாய்ப்பு உண்டு. அதற்கு 3 மாதங்களுக்கொரு முறை அமிலச் சுத்திகரிப்புச் (Acid Treatment) செய்ய வேண்டும். அதை விவசாயிகளில் சிலர்தான் முறையாகச் செய்கிறார்கள். பெரும்பாலானோர் இதைச் செய்யாததால் அடைப்பு ஏற்படுகிறது.
இதற்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு லிட்டர் அமிலத்திற்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அதை நீர் பாய்ச்சும் போது கலந்து செலுத்தினால் அடைப்புகள், படிவுகள் நீங்கி விடும். 3 மாதங்களுக்கொரு முறை செய்வதோடு, பயிர் அறுவடைக்கு முன்னதாகவும் தூய்மையாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுபற்றிப் போதிய விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லை என்பதே உண்மை.
கேள்வி : பெரிய விவசாயிகள், சிறிய விவசாயிகள் இவர்களில் யார் அதிகமாகச் சொட்டு நீர்ப்பாசனத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்?

பதில் : படித்தவர்கள், படிக்காதவர்கள், பெரிய விவசாயி, சிறிய விவசாயி என எல்லோருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டது. எனவே, எல்லாத்தரப்பு விவசாயிகளும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தண்ணீரை எவ்வளவு சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுதான் பெரும்பாலோருக்கு இல்லை. அதனால், தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தி வீணாக்குகிறார்கள்.

கேள்வி : சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கும் பணியில் உங்கள் பணியாளர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கிறீர்களா? அல்லது இதற்கென ஏதேனும் தனியாகப் படித்து வருகிறார்களா?

பதில் : இதற்கெனத் தனியாக எதுவும் படித்து யாரும் வேலைக்கு வருவதில்லை. எங்களுக்குக் களப்பணிக்கு உடல் உழைப்பை அதிகம் செய்பவர்கள் தேவைப்படுகின்றனர். அதற்குச் சாதாரண விவசாயத் தொழிலாளர்களே போதும். படித்தவர்கள் தேவையில்லை. நிலத்தைச் சர்வே செய்து வரைபடம், திட்டம் தயாரிக்கச் சுமாராக +2, பட்டப்படிப்புப் படித்தவர்கள் போதும். அவர்கள் ஒரு சில நாட்கள் எங்களுடன் வந்து பயிற்சி எடுத்துப் பழகிக் கொள்வார்கள். பின் அவர்களே அளவுகளைக் கணக்கிட்டு எல்லாப் பணிகளையும் செய்யும் திறனைப் பெற்று விடுவார்கள்.
கேள்வி : தமிழ்நாட்டில் எத்தனை நிறுவனங்கள் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனத் துறையில் உள்ளன?

பதில் : தமிழ்நாட்டில் சுமார் 30 பதிவு பெற்ற நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்திலேயே தயாரிப்புப் பணியைச் செய்யும் நிறுவனங்கள் சுமார் 5-6 நிறுவனங்கள்தான் உள்ளன. ஆனால், தமிழகத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன.
திரு. ராஜாமணி அவர்கள் தந்த தகவல்களின்படி மண்ணுக்குத் தகுந்தவாறு சொட்டு நீர்ப்பாசனம் அல்லது தெளிப்பு நீர்ப்பாசனம் இரண்டில் எது தேவையென்று ஆய்ந்து உரியதை அமைத்துக் கொள்வது விவசாயத்திற்குச் சிறந்ததாக அமையும்.
திரு. நல்லுசாமி அவர்கள் கள் இயக்கம் ஒன்றையே தமிழகத்தில் நடத்தி வருகிறார். அதுபோல, சொட்டு நீர்ப் பாசனத்திற்கென்றே ஒரு தனி இயக்கத்தைத் தலைமைப் பண்புள்ள யாரேனும் நடத்த வேண்டாமா? பாசனப் பற்றாக்குறையைப் போலத் தலைமைப் பற்றாக்குறையும் நமக்கு ஏற்படக் கூடாது.


                                                                           

No comments:

Post a Comment