Powered By Blogger

Saturday 11 June 2016

பனங்கிழங்கு புட்டு மற்றும் கூல் செய்முறை



 


ஒடியல் புட்டு

செய்முறை
தேவையான பொருட்கள் :
  • ஒடியல் மா
  • தேங்காய்ப் பூ
  • தண்ணீர்
  • உப்பு (சிறிதளவு )
விரும்பினால்
  • கத்தரிக்காய்
  • கீரை
  • பச்சை மிளகாய்
  • நெத்தலி
செய்முறை
  • ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும்.
  • மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும்.
  • பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும்.
  • இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும்.
  • குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு ஆவியில் அவிக்கவும். தேங்காய்ப்பூவை ஒரு தரம் தண்ணீர் விட்டுப் பிழிந்து பாலை எடுத்த பின்னரே ஒடியல் பிட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். தேங்காய்ப்பூ பாலுடன் ஈரலிப்பாக இருந்தால் பிட்டு நீர்த்து விடும்.
  • இந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய், கீரை.. போன்ற காய்கறிகள், சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய், தாராளமான தேங்காய்ப் பூ... போன்றவைகளைப் போட்டு அவித்தால் மிகவும் சுவையாக இருக்கும். காய்கள் போட்டு இப்படி அவிக்கும் பிட்டுக்கு தேங்காய்ப்பூவிலிருந்து பாலைப் பிழிந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • பச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.
  • பிட்டை அவித்து இறக்கியதும் உடனேயே பிரித்து, உதிர்த்து விட வேண்டும். இல்லாவிடில் பிட்டு கட்டியாக இறுகி விடும்.

ஒடியல் கூழ் குடிப்போமா?


தேவையான பொருட்கள் :-

பொதுவானவை :
  1. ஒடியல் மா - 1 சுண்டு ( நிரப்பி )
  2. பயிற்றங் காய் - 100 கிராம் 
  3. மரவள்ளி கிழங்கு - 100 கிராம்
  4. பலா கொட்டை - 100 கிராம்
  5. செத்தல் மிளகாய் - 20
  6. மிளகு - 1 தே . .( நிரப்பி )
  7. மஞ்சள் - 1 துண்டு ( 2" நீளம் )
  8. உள்ளி - 5 பெரிய பல்லு
  9. பழப்புளி - பாக்களவு
  10. புழுங்கல் அரிசி - 1 பிடி
  11. முசுட்டை இல்லை / முருங்கை இல்லை -  10 நெட்டு
  12. பல்லுபோல் வெட்டப்பட தேங்காய் சொட்டு - 1/2 சுண்டு
  13. உப்பு - அளவிற்கு 

சைவ கூழ்  :
  • கத்தரிக்காய் - 100 கிராம்
  • கடலை - 100 கிராம்
  • வாழை காய் - 1 ( பெரிது )

அசைவ கூழ் :-
  • முள் இல்லாத மீன்வகை ( ரால் நெத்தலி ) - 500 கிராம்
  • நண்டு - 2
  • பாரை / கூழ் மீன் தலை - 1
  • சிறிய மீன் கருவாடு - 50 கிராம்

செய்முறை :-
  • செத்தல் மிளகாய் , மிளகு , உள்ளி , மஞ்சள் என்பவற்றிட்கு ஓரளவு நேர் சேர்த்து பசுந்தையாக அரைத்து வைத்து கொள்க .

  • மீன் வகைகள் , கருவாடு என்பவற்றை கழுவி துப்புரவு செய்து வைத்துக் கொள்க .

  • மரவள்ளி கிழங்கு , பயிற்ரங்காய்  , ப்ளாக் கொட்டை என்பவற்றை துப்புரவாக்கி சிறு துண்டுகளாக வெட்டி கழுவி வைத்து கொள்க .

  • பாத்திரத்தில் பழப் புளியை இட்டு   ஒரு தம்ளர் விட்டுகரைத்து வைத்துக் கொள்க 

  • ஒடியல் மாவை பிறிதொரு பாத்திரத்தில் இட்டு அளவிற்கு நீர் சேர்த்து கூழ் பதமாக கரைத்து அரை மணிநேரம் ஊற வைத்து எடுத்து ஒரு துணியில் இட்டு பிழிந்தெடுத்து பிறிதொரு பாத்திரத்தில் போட்டு , அரைத்த கூட்டையும் சேர்த்து வைத்துள்ள 1 தம்ளர் பழப் புளியையும் விட்டு அளவிற்கு தண்ணீரும் விட்டு நீர்ப் பதமாக  கரைத்து வைக்குக .

  • ஒரு பானை ( ஒரு கொத்து அரிசி அவிய கூடிய பாத்திரம் ) அதன் அரைவாசிக்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கொதித்தபின் கழுவி வைத்துள்ள மரக்கறி , முசுட்டை இல்லை / முருங்கை இலை  கழுவிய அரிசி என்பவற்றை இட்டு அவிய விடவும் . இவை முக்கல்பதமாக அவிந்த பின்பு மீன் வகை , கருவாடு என்பவற்றையும் போட்டு அவியவிடவும்.

  • மரக்கறி வகை நன்றாக அவிந்ததும் , ஒடியல் மா கரைசலை ஊற்றி  நன்றாக கரண்டியால் கலக்கி அளவிற்கு உப்பும் சேர்த்து தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடன் பரிமாறலாம் .

குறிப்பு :-
  • சைவக் கூழ் எனில் அசைவ பொருட்களை தவிர்த்து கடலை , கத்தரிக்காய் , வாழைக்காய் என்பவற்றை சேர்த்து மற்றைய மரக் கறி  வகைகளுடன் சேர்த்து அவிய விடவும் .

  • கடலையை 3 மணி நேரம் ஊறவிட வேண்டும்

1 comment: