Powered By Blogger

Monday 6 June 2016


பனை மரம்

 பனை  புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு  என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்


பெயரிடல்

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.


காணப்படும் இடங்கள்

இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.
பனையுச்சி
கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம்  எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே.

பனையின் பயன்கள்

பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.

பனையின் இன்னல்கள்

பனங்கருக்குப் பகுதி
பனைமரமேறி
  • பனங்கருக்கு
பனங்கருக்குகள், பனைமரமேறிகளுக்கு மிகுந்த ஊறு விளைவிப்பவையாகும். கூர்மையான அந்த முட்கள் போன்ற அமைவுகள், அவ்வேழை பனைமரமேறிகளுக்கு இன்னல் தருகிறது.

பனங்கை

பனங்கை அல்லது பனை வரிச்சல் என்பது பனை மரத்தை நீளவாக்கில் அறுத்தால் வரும் நீளமான மரக்கட்டை ஆகும். இது கட்டிடக் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது.

பனையேற்றம்

பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகசுடு வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகசுடு முதல் மார்ச் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது.
பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர்.

1 comment:

  1. How to Win at Baccarat - Worrione
    Baccarat is 1xbet one of the most popular table games worrione in poker and casino poker. The game of 메리트 카지노 주소 Baccarat is played between two cards (the two

    ReplyDelete