Powered By Blogger

Monday 6 June 2016

பணம் காய்க்கும் பனை… 100 மரங்கள்… ஆண்டுக்கு ரூ 8 லட்சம்!

நாகரிக மயக்கத்தில் நுகர்வுக் கலாசாரம் மாறிப்போனதால் வழக்கொழிந்து வரும் இயற்கைப் பொருட்களில் ஒன்று, பனங்கருப்பட்டி. தற்போது, சர்க்கரைக்கு மாற்றாக இதன் தேவை அதிகரித்து வந்தாலும், உற்பத்தி மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. தென் மாவட்டங்களில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக இருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்கள், செங்கல் சூளைகளில் எரிந்து சாம்பலாகி விட்டன. அதனால், பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதால்… பதநீர் இறக்குதல்; கற்கண்டு, கருப்பட்டித் தயாரித்தல்; பனையோலைப் பொருட்கள் தயாரித்தல்… என பனைச்சார்ந்த தொழில்களும் அருகி விட்டன.இந்நிலையிலும், குலத்தொழிலை மறக்காமல் அதில் ஈடுபட்டு வருபவர்களில் ஒருவர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவதாஸ். இவர் பல ஆண்டுகளாக பனங்கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அடைக்கலாபுரம் கிராமத்தில்தான் தேவதாஸின் பனந்தோப்பு உள்ளது. லேசான பனிக்காற்றுடன் இளம்வெயில் அடித்துக்கொண்டிருந்த ஒரு காலைவேளையில் பொங்கல் சிறப்பிதழுக்காக தேவதாஸைச் சந்தித்தோம்.
“இந்த ஊர்தான் பூர்விகம். தாத்தா, அப்பானு எல்லாருமே பதநீர் எடுத்து காய்ச்சி கருப்பட்டி செய்து விற்பனை செய்ற தொழில்தான்  செய்தாங்க. எங்க அப்பா பனை மரம் ஏறவும் செய்வார். நான், பத்தாம் வகுப்பு வரை படிச்சிட்டு அப்பாவுக்கு உதவியா வந்துட்டேன். எனக்கு பனை ஏறத் தெரியாது. ஆனா, கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டி காய்ச்ச தெரியும். அப்பாவுக்குப் பிறகு பத்து வருஷமா நானே தனியா கருப்பட்டித் தொழிலைப் பார்த்துக்கிட்டிருக்கேன்” என்ற தேவதாஸ் தொடர்ந்தார்.

பெண் பனையில்தான் நுங்கு!
“பனந்தோப்பு மொத்தம் இரண்டேகால் ஏக்கர். கைக்கு எட்டும் விடலி (5 -6 வயதுள்ள மரங்கள்), வானுயர வளர்ந்து நிற்கும் நெட்டைப் பனை, தனியாக நிற்கும் ஒற்றைப்பனைனு மொத்தம் 150 பனை மரங்கள் இருக்கு. அதுல 100 மரங்கள் தெளிச்சலான (பயன் தரும்) மரங்கள். மீதியெல்லாம் கள்ளப்பனைகள் (பயன் தராத பனைகள்). பனைகளில் ஆண் பனை, பெண் பனைனு ரெண்டு வகை இருக்கு. பாளை மட்டும் வெளிய நீட்டிட்டு இருக்கிற பனை ஆண் பனை. ஆண் பனையில நுங்கு காய்க்காது. பெண் பனையில மட்டும்தான் நுங்கு காய்க்கும். அதே மாதிரி பெண் பனைகள்ல ஓலை அதிகமா இருக்கும். ஆண் பனையை விட பெண் பனையில பதநீர் கூடுதலா கிடைக்கும்.
ஆறு மாத சீசன்!
ஏப்ரல் மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரை 6 மாசம்தான் பனை சீசன் காலம். மார்ச் மாத கடைசியில பாளை விடும். பாளை கண்ணுக்குத் தென்பட்ட அந்த மரத்துல ஏறி பாளையை இடுக்கி விடணும் (பாக்கு வெட்டி அமைப்பில் உள்ள கருவியின் மூலம் பாளையை அழுத்தி விடுவதை ‘இடுக்குதல்’ என்கிறார்கள்). இடுக்கி விட, இடுக்கி விடத்தான் பதநீர் ஊறும். அப்பறம் நுனியை சீவிப் பாப்பாங்க. சொட்டு விழ ஆரம்பிச்சா, சுண்ணாம்பு தடவின மண்பானையைக் கட்டிடுவாங்க. சொட்டலைனா திரும்பவும் இடுக்கி விடணும்.
சிப்பியில் இருந்து சுண்ணாம்பு!
நுனியைப் பெரிசா சீவினா ரெண்டு மாசத்துலேயே பதநீர் சொட்டுறது நின்னுடும். சின்னதா சீவினா ஆறு மாசம் வரைக்கும் பதனீர் சொட்டிக்கிட்டே இருக்கும். தினமும் காலை, மாலைனு ரெண்டு வேளையும் மரம் ஏறி பாளையை சீவி விடணும். மண் பானையில சுண்ணாம்பு தடவாம விட்டா பதநீர் ஒரு மணி நேரத்துல புளிச்சு கள்ளா மாறிடும். வேக வைத்த கடல் சிப்பியில இருந்த்துதான் சுண்ணாம்பு தயாரிப்போம். சுண்ணாம்பு சுத்தமா இருந்தாத்தான் பதநீர் சுவையா இருக்கும். காய்ச்சி கருப்பட்டியா மாற்றும்போது நல்ல சுவை கிடைக்கும்” என்ற தேவதாஸ் தொடர்ந்தார்.
450 கிலோ கருப்பட்டி… 375 கிலோ சில்லுக்கருப்பட்டி!
“இங்க, கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி ரெண்டையும் தயாரிக்கிறோம். ஒரு நாள் கருப்பட்டி அடுத்த நாள் சில்லுக்கருப்பட்டினு மாத்திக்குவோம். ஒரு நாளைக்கு 160 லிட்டர் பதநீர் கிடைக்குது. அதுல 30 கிலோ கருப்பட்டி தயாரிக்கலாம். சில்லுக்கருப்பட்டினா 25 கிலோ தயாரிக்கலாம். அந்தக் கணக்குல ஒரு மாசத்துக்கு 450 கிலோ கருப்பட்டியும், 375 கிலோ சில்லுக்கருப்பட்டியும் தயாரிக்கிறோம் கருப்பட்டி ஒரு கிலோ 200 ரூபாய்னு விற்பனையாகுது. சில்லுக்கருப்பட்டி ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையாகுது. அந்தக் கணக்குல பார்த்தா மாசத்துக்கு 2 லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும். அதுல பனை ஏறுபவர் கூலி, காய்ச்சுபவர் கூலி, போக்குவரத்துனு எல்லா செலவும் போக 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை லாபமா நிக்கும். வருஷத்துக்கு (ஆறு மாத சீசன்) 8 லட்ச ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்” என்ற தேவதாஸ் நிறைவாக,
இயற்கைக் கருப்பட்டியை விற்பது சுலபம்!
“இயற்கை முறையில சீனிப்பாகு கலக்காம உற்பத்தி செய்றதுனால வியாபாரிகளே நேரடியா என்னோட பனந்தோப்புக்கே வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. அதனால, விற்பனைக்கும் வில்லங்கமில்லை. கருப்பட்டியை கால் கிலோ, அரை கிலோ 1 கிலோ அளவுல ஓலைப்பெட்டியில போட்டும்; 5 கிலோ, 10 கிலோ அளவுல சிப்பத்துல போட்டும் விற்பனை செய்றேன். இந்த வருஷம் பனங்கருப்பட்டியில் கடலை மிட்டாய், பனங்கிழங்கு மாவு தயாரிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கண்களில் நம்பிக்கை பொங்க விடைகொடுத்தார்.


ஒரு பனையில்… ஆண்டுக்கு ரூ 5 ஆயிரம்..!
“ஒரு விவசாயியோட தோட்டத்துல, பண்ணையில 15 மரங்கள் இருந்தால் போதும். பனங்கொட்டையை நட்ட 9 முதல் 10 வருஷத்துலயே பனை பருவத்துக்கு வந்துடும். தண்ணீர் உள்ள இடமா இருந்தா இன்னமும் சீக்கிரமா பருவத்துக்கு வந்துடும். ஒரு மரத்தில் ஒரு வருடத்தில் 4 புது ஓலைகள் வரும். 4 காய்ந்த  ஓலைகள் கீழே விழும். ஒரு ஓலையின் மதிப்பு 20 ரூ.4 ஓலைக்கு 80 ரூபாய் வருமானம். சராசரியாக ஒரு மரத்திலிருந்து வருடத்திற்கு பனை சீசனில் 150 லிட்டர் பதனீர் கிடைக்கும். ஒரு லிட்டர் 25 ருபாய் வீதம் 150 லிட்டருக்கு 3,750 ரூபாய் வருமானம் வரும். நுங்கு 8 குலைகள் கிடைக்கும். ஒரு குலையில் சராசரியாக 20 பனங்காய்கள் இருக்கும். ஒவ்வொரு பனங்காயிலும் 3 கண் நுங்கு இருக்கும். 3 நுங்கு 10 ரூபாய். 8 குலைகளில் 160 பனங்காய்கள். ஒரு காய் (3 கண் உடையது) 10 ரூபாய் வீதம் 160 காய்க்கு 1,600 ரூபாய் வருமானம். நுங்கு இறக்காமல் அப்படியே விட்டால் பனம்பழமாக பழுத்து கீழே விழும். ஒரு பழத்தில் 3 கொட்டைகள் 160 பழத்தில் 480 கொட்டைகள் வரும். மண்ணில் புதைத்து வைத்தால், 4 மாதத்தில் 480 கொட்டைகளில் சராசரியாக 450 உருப்படியான கிழங்குகள் கிடைக்கும். கிழங்கு ஒன்று 3 ரூபாய் வீதம் விற்றால், கிழங்கு மூலம் 1,350 ரூபாய் வருமானம் வரும். மொத்தத்தில் ஒரு வருடத்தில் பனை மூலம் வருமானம் 5,430 ரூபாய் ( இதில் கிழங்கு வருமானம் ரூ.1,350 சேர்த்தால் 6,750 ரூபாய்) சராசரியாக ஒரு பனையின் ஒரு வருட மதிப்பு 5,000 முதல் 6,000 வரை கிடைக்கும்’’ என்கிறார் தேவதாஸ்.

பனங்கொட்டையை விதைத்தால், பலன் கொடுக்க 18 ஆண்டுகள் பிடிக்கும். பனைமரம் 120 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.
வறட்சியான பகுதிகளில் வாழும் மக்களுக்கான இயற்கைக் கொடை பனை.
இந்தியாவில், தமிழ்நாட்டில்தான் பனைமரங்கள் அதிகம் உள்ளன.
ஒரு பனையில் ஓர் ஆண்டுக்கு 20 முதல் 30 ஓலைகள் உருவாகும். 6 முதல் 12 பாளைகள் தள்ளும். 100 முதல் 120 பனம்பழங்கள் காய்க்கும்.
பனை 10 ஆண்டுகள் வளர்ந்த பிறகுதான் பூ பூக்கும். அதன் பிறகுதான் ஆண், பெண் மரங்களை அடையாளம் காண முடியும். ஆண் பனையை ‘அழகுப்பனை’ என்றும், பெண் பனையை ‘பருவப்பனை’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மென்மையாகவும் நெளியும் தன்மையுடனும் இருக்கும் பனை ஓலைகள், பல ஆண்டுகள் சிதிலமடையாமல் இருக்கும். அதனால்தான் சங்ககாலத்தில் எழுதுவதற்கு ஓலையைப் பயன்படுத்தியுள்ளனர்.
சீரகத்தை வறுத்து சில்லுக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தைச் சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.
25 கிராம் குப்பைமேனிக் கீரையுடன் 25 கிராம் பனங்கருப்பட்டியைப் பொடித்துச் சேர்த்து வாணலியில் வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளி குணமாகும்.
சுக்குக் கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் நன்றாக சுரக்கும். குழந்தைக்கும் ஊட்டம் கிடைக்கும்.
அரைப்படி முதல் ஐந்து படி வரை கொள்ளளவு கொண்ட ஓலைப்பெட்டிகளை ‘கொட்டான்கள்’ அல்லது ‘குட்டான்கள்’ என்பர்.
6 படியிலிருந்து 20 படி கொள்ளளவு கொண்ட பெட்டிகள் ‘சீர்வரிசைப் பெட்டிகள்’.
21 படி முதல் 30 படி வரை கொள்ளளவு கொண்ட பெட்டிகள் ‘அரைப் பெட்டிகள்’.
5 மரக்கால் அளவுள்ள பெரிய நேர்த்தியான பெட்டிகள் ‘கடகம்’.
நெல், இதர சிறுதானியங்களைத் தூற்றி தரம் பிரிக்கப் பயன்படுத்தப்படும் பெட்டிகள் ‘தூற்றுப் பெட்டிகள்’.
தானியங்களைப் புடைத்துப் பிரிக்கப் பயன்படும் முறத்தையும் பனை ஓலையில் பின்னுவார்கள். இதை, ‘சொலகு’ எனச் சொல்வார்கள்.

டைக்கலாபுரம் கிராமத்தில் தாய் சேசிலியம்மாவுடன் சேர்ந்து பனை ஓலைப்பெட்டி பின்னி வருகிறார், அமுதா. அவரிடம் பேசினோம்.

“அம்மா 40 வருஷமா இதே வேலைதான் செய்றாங்க. நான் 15 வருஷமா செய்துக்கிட்டிருக்கேன். ஓலைப்பெட்டியும், பாயும் தயார் செய்றோம். பச்சை ஓலையை ஒரு நாள் காய வைப்போம். அடுத்த நாள் அதை திருப்பிப் போட்டு காய வெச்சு ஈர்க்கைப் பிரிச்சு பெட்டிகள் பின்னுவோம். சின்ன சைஸ்ல இருந்து பெரிய சைஸ் வரை பெட்டிகள் செய்வோம். தேவையைப் பொறுத்து ஓலைப்பாய்களும் பின்னுவோம். சின்னப்பெட்டி பின்னுறதுக்கு 2 ரூபாய் கூலி. பெரிய பெட்டிக்கு 5 ரூபாய் கூலி. பாய் பின்ன 8 ரூபாய் கூலி கொடுப்பாங்க. முன்னாடி, முறம், விசிறி, கிலுகிலுப்பை, பர்ஸ், தட்டு, கூடை…னு நிறைய பொருட்கள் செய்வோம். இப்போ மரங்கள் குறைஞ்சிட்டதால அதெல்லாம் ஒழிஞ்சி போச்சு. ஒரு நாளைக்கு 40 சின்னப் பெட்டி பின்ன முடியும். பெரிய பெட்டின்னா 25 பின்னலாம். ஒரு நாளைக்கு 10 பாய் முடையலாம்.
சீசன் ஆரம்பிச்சாத்தான் எங்களுக்கு வேலை கிடைக்கும். முன்னல்லாம் ஓலைப்பெட்டிங்களை நிறைய பயன்படுத்துவாங்க. மிட்டாய்கள், இனிப்புகள், விதைகள்  இவற்றை எல்லாம் அதுலதான் போட்டுக் கொடுப்பாங்க. இப்போ அதெல்லாம் இல்லை. கருப்பட்டிக்கு மட்டும்தான் பயன்படுத்துறாங்க” என்றார், வருத்தத்துடன்.

கருப்பட்டிப் பொங்கல்!
“கரும்புச்சாறுல இருந்து அச்சுவெல்லம்,  உருண்டை வெல்லமெல்லாம் தயார் பண்ண ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி… எல்லா உபயோகத்துக்கும் பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டியைத்தான் பயன்படுத்துவாங்க. எங்க பகுதியில பனங்கற்கண்டை தட்டிப் போட்டுத்தான் பொங்கல் வைப்பாங்க. அந்த பொங்கல் வாசனை, மூக்கைத் துளைக்கும். அதை எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. இப்போ எல்லாரும் அச்சுவெல்லம், உருண்டை வெல்லத்தைத்தான் அதிகமா பயன்படுத்துறாங்க. இப்பவும் கூட, பனைமரங்கள் அதிகம் இருக்கிற அடைக்கலாபுரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி, மணப்பாடு, உவரி மாதிரியான ஊர்கள்ல பனங்கற்கண்டு போட்டு பொங்கல் செய்யுறது வழக்கத்துல இருக்கு. இந்தப்பகுதிகள்ல வீட்டு விசேஷங்கள்ல பனங்கற்கண்டு பாயசம் செய்ற வழக்கம் இன்னமும் இருக்குது.
வெல்லத்தை விட பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டியில் இருக்கிற சர்க்கரையின் அளவு குறைவு. வெந்தயக்களி, உளுந்தங்களியில் நல்லெண்ணையோட கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிடுறப்போ சுவையா இருக்கும். பருவத்துக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கருப்பட்டி கலந்து உளுந்தங்களி செஞ்சு கொடுப்பாங்க. இதனால இடுப்புக்கும், கருப்பைக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வயிறு உப்புசத்துக்கு சுக்கு கலந்த சில்லுக்கருப்பட்டியை வாயில போட்டு மென்றாலே சரியாயிடும்” என்கிறார், தேவதாஸ்.

இப்படித்தான் தயாரிக்கணும் கருப்பட்டி..!
பதநீர் இறக்கி கருப்பட்டி தயாரிக்கும் முறை குறித்து தேவதாஸ் சொன்ன விஷயங்கள் இங்கே…
“100 பனைகள் பலன் கொடுத்தாலும் சுழற்சி முறையில ஐம்பது ஐம்பது மரங்களாதான் பதநீர் இறக்குவோம். 50 மரங்கள்ல 160 லிட்டர் வரை  பதநீர் கிடைக்கும்.

சிரட்டையில் உருவாகும் கருப்பட்டி!
160 லிட்டர் தெளிந்த பதநீரை தாங்கியில் (வட்ட வடிவ இரும்புக் கொப்பரை, ஒரு தாங்கியின் கொள்ளளவு 200 லிட்டர்) ஊற்றி, அது கால் பங்காக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதற்கு கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் வரை பிடிக்கும். காய்ச்சப்பட்ட பதநீருக்கு ‘கூம்பனி’ என்று பெயர். கூம்பனி தயாரானதும் அதை இறக்காமல் அப்படியே தனலில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலை கூம்பனியை மீண்டும் அரை மணி நேரம் காய்ச்சினால், கெட்டியாகி கருப்பட்டி பதம் வரும். மணலில் துணியை விரித்து அதில் வரிசையாக தேங்காய் சிரட்டைகளை அடுக்கி அதில் கூம்பனியை ஊற்றினால்… 20 முதல் 30 நிமிடங்களில் இறுகி கருப்பட்டியாகி விடும். சிரட்டைகளில் துளை இருந்தாலும் துணி விரிப்பதால் வீணாகாது.
அச்சில் உருவாகும் சில்லுக்கருப்பட்டி!
160 லிட்டர் தெளிந்த பதநீரை கருப்பட்டிக்குக் காய்ச்சுவது போல காய்ச்சி கால் பங்காக சுண்டியவுடன்… தனலில் வைத்து விட வேண்டும். மறுநாள், 10 லிட்டர் கொள்ளளவுள்ள பாத்திரத்தில் 3 லிட்டர் கூம்பனியை ஊற்றிக் கிளறிக்கொண்டே 20 நிமிடம் காய்ச்சி கெட்டிப்பதத்தில் இறக்கி… சுக்கு, மிளகு, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளற வேண்டும். பிறகு, அதை சில்லுக்கருப்பட்டிக்கான அச்சுத்தட்டில் ஊற்றினால், பத்து நிமிடங்களில் சில்லுக்கருப்பட்டி தயாராகி விடும்”.

1 comment:

  1. சில்லுக்கருப்பட்டி வெள்ளை கலந்த மஞ்சள் நிறமாகவும், கருப்பட்டி ப்ரவுன் களராகவும் இருக்க காரணம்?

    ஒரு கிலோவுக்கு சீனி எவ்வளவு சேர்ப்பீர்கள்?

    ReplyDelete